ட்ரெண்டிங்

வரத்துக் குறைவாக இருந்தாலும் விலை அதிகம் கிடைத்ததால் மஞ்சள் விவசாயிகள் மகிழ்ச்சி!

சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் 2 கோடியே 26 லட்சம் ரூபாய்க்கு மஞ்சள் ஏலம் போனது. வரத்து குறைந்த போதிலும் மஞ்சள் விலை அதிகம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். 

இந்த மஞ்சள் ஏலத்தில் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மஞ்சள் மூட்டைகளைக் கொண்டு வந்திருந்தனர். அதேபோல், மஞ்சளை ஏலத்தில் எடுப்பதற்காக, சேலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். 

கடந்த வாரத்தை விட, இந்த வாரம் மஞ்சள் ஒரு குவிண்டாலுக்கு 800 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை கூடுதல் விலை கிடைத்ததாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஆத்தூர், தம்மம்பட்டி, தலைவாசல், கெங்கவல்லி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 2,812 மூட்டைகளில் 389 விவசாயிகள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 

விரலி மஞ்சள் அதிகபட்சமாக, குவிண்டாலுக்கு 17,000 ரூபாய் வரை விலை போனது என்பது குறிப்பிடத்தக்கது.