ட்ரெண்டிங்

மதுப்போதையில் தாயிடம் தவறாக நடக்க முயன்ற மகன் கொலை!

சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த நங்கவள்ளி, சாணாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதி பழனிசாமி (வயது 50)- சரோஜா (வயது 44). இந்த தம்பதிக்கு அருண்குமார் (வயது 27), கார்த்திக் (வயது 23) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் அருண்குமார் அப்பகுதியில் வெல்டிங் வேலை செய்து வரும் நிலையில், அருண்குமாருக்கு குடிப்பழக்கம் இருப்பதால் ஒரு ஆண்டுக்கு முன்பு அவரது மனைவி பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 6- ஆம் தேதி அன்று இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து அருண்குமார் உயிரிழந்து விட்டதாக அவரது தாய் சரோஜா, சகோதரன் கார்த்திக் ஆகியோர் உறவினர்களிடம் தெரிவித்து அருண்குமார் சடலத்தை மயானத்தில் எரித்துள்ளனர்.

 

இந்த சூழலில், அருண்குமார் மரணத்தின் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் காவல் உயர்அதிகாரிகளுக்கும், முதலமைச்ச்சரின் தனி பிரிவிற்கும் புகார் அனுப்பினர். புகாரின் அடிப்படையில் தாய் சரோஜா, சகோதரர் கார்த்திக் ஆகிய இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து நங்கவள்ளி காவல்துறையினர் விசாரணை செய்தனர்.

 

விசாரணையில், அருண்குமார் குடித்துவிட்டு அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். அதேபோல், செப்டம்பர் 6- ஆம் தேதி அன்று குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த அருண்குமார், தாய் சரோஜாவிடம் தவறாகக் கொள்ள முயன்றுள்ளார். இதனைக் கண்ட சகோதரர் கார்த்திக் சம்பட்டியால் தாக்கியதில் அருண்குமார் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்" என்பது தெரிய வந்தது.

 

இதையடுத்து, வனவாசி கிராம நிர்வாக அலுவலர் முருகன், நங்கவள்ளி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், மகன் கார்த்திக், கொலைக்கு உடந்தையாக இருந்த தாய் சரோஜா ஆகிய இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

 

இந்த சம்பவம் நங்கவள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.