ட்ரெண்டிங்

 சவுண்ட் சர்வீஸ் கடையில் பயங்கர தீ விபத்து! 

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள திருமணிமுத்தாற்றின் கரையோரம், பாஸ்கர் என்பவர் தங்கம் மூவி லைட்ஸ் என்ற பெயரில் சவுண்ட் சர்வீஸ் கடையை நடத்தி வருகிறார். அங்குள்ள வீட்டின் மேல் மாடியில் உள்ள இவரது குடோனில் நேற்று (ஜூன் 26) நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் திடீரென புகை வந்துள்ளது. சிறிது நேரத்தில் குடோனில் தீப் பற்றி எரிய தொடங்கியுள்ளது. 

இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறினர். அதைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து 2 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த செவ்வாய்பேட்டை தீயணைப்புத் துறையினர், தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

எனினும், குடோனில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமாகின. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது யாரேனும் தீ வைத்தனரா? என்ற கோணத்தில் சேலம் டவுன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது சேலம் பழைய பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.