ஆன்மிகம்

கோட்டை மாரியம்மனை பற்றி உங்களுக்கு தெரியுமா?- ஆடி திருவிழாவில் தெரிந்துக் கொள்ளுங்கள்!

சேலம் கோட்டை  மாரியம்மன் கோயிலின் வரலாறு மற்றும் சிறப்புகள் குறித்து விரிவாகப் பார்ப்போம். 

சேர நாட்டைச் சேர்ந்த சிற்றரசர்கள் ஆண்ட காலத்தில், சேலத்தில் கோட்டை அமைத்து ஆட்சி செய்துள்ளனர். அப்போது கோட்டையை சுற்றி ஒரு மாரியம்மன் கோயிலையும், ஒரு பெருமாள் கோயிலையும் கட்டியுள்ளனர். பின்னர், கோட்டையில் பாதுகாப்புப் பணிக்காக இருந்த வீரர்கள் மாரியம்மனை கோட்டையின் காவல் தெய்வமாக வணங்கி வந்ததாக,  வரலாற்று ஆய்வுத் தகவல்கள் கூறுகின்றனர். 

அதனால் தான் மாரியம்மன் கோயிலுக்கு, கோட்டை மாரியம்மன் என்ற பெயர் வந்தது. அந்த காலத்தில் மணிமுத்தாற்றில் ஓடிய புனித நீரை எடுத்து வந்து தான் மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வந்துள்ளது. சக்தி வாய்ந்த அம்மனாக மாரியம்மன் திகழ்ந்திருக்கிறாள்; அத்துடன், கோட்டையின் காவல் தெய்வமாகவும் இருந்திருக்கிறாள். 

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது கோட்டை மாரியம்மன் கோயில். அதைத் தொடர்ந்து, கோட்டைக்குள் இருந்த அம்மனை எடுத்து வந்து, தற்போது சேலம் மாநகரின் மைய  பகுதியில் அமைந்துள்ள இடத்திற்கு மாற்றி, கடந்த 1993- ஆம் ஆண்டு ஜூலை மாதம் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 

சேலம் மாவட்டத்தின் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த மக்கள் இங்கு வந்து தரிசனம் செய்துவிட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சேலம் மாநகரில் அமைந்துள்ள எட்டு மாரியம்மன் கோயில்களில் கோட்டை மாரியம்மன் கோயிலே பெரியது. அதுமட்டுமின்றி, எட்டு மாரியம்மன் கோயில்களுக்கும் தலைவியாக கோட்டை மாரியம்மன் இருக்கிறாள். 

ஆண்டுதோறும் ஆடி மாதம், சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் திருவிழா நடைபெறும். இது சேலத்தில் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாவாகும். இந்த திருவிழாவிற்கு ஒருநாள் உள்ளூர் விடுமுறையும் விடப்படுகிறது. 

ஆடி மாதத்தில் அம்மனுக்கு பூச்சாட்டலுடன் விழா தொடங்கி 22 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், பூச்சாட்டுதலின் போது சேலத்தில் உள்ள மற்ற 7மாரியம்மன் கோயில்களுக்கும் இங்கிருந்துதான் பூ எடுத்துச்சென்று அந்தந்த மாரியம்மன் திருக்கோயில்களில் பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 

ஆடித்திருவிழாவின் போது கோட்டை பெருமாள் கோயிலில் இருந்து அழகிரிநாத சுவாமியின் தங்கையான கோட்டை மாரியம்மனுக்கு சீர்வரிசைகள் கொண்டு வருவது தொடர்ந்து வருகிறது. 

சேலத்திற்கு வரும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நடிகர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் கோட்டை மாரியம்மனை தரிசனம் செய்து விட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

கடந்த சில ஆண்டுகளாக கோட்டை மாரியம்மன் கோயிலில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், 90% பணிகள் நிறைவடைந்துள்ளதால், 20- ஆம் ஆண்டுகளுக்கு பிறகு வரும் செப்டம்பர் மாதம் மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. குறிப்பாக, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கு கீழ் வந்த பிறகு முதன்முறையாக கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மாநகரத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள் என்பதால், இந்து சமய அறநிலையத்துறை விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.