ட்ரெண்டிங்

வெண்டைக்காய் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி!

தேவூர் பகுதியில் வெண்டைக்காய் விலை திடீரென உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

சேலம் மாவட்டம், தேவூர், மூலப்பாதை, வெள்ளாளபாளையம், சுண்ணாம்புக்கரட்டூர், ஒக்கிலிப்பட்டி, கோணக்கழத்தானூர், பூமணியூர், குள்ளம்பட்டி, குஞ்சாம்பாளையம், சென்றாயனூர், புள்ளாக்கவுண்டம்பட்டி, மோட்டூர், செட்டிப்பட்டி, தண்ணித்தாசனூர், காவேரிப்பட்டி, கோனேரிப்பட்டி, மேட்டுப்பாளையம், கொட்டாயூர் உள்ளிட்ட 50- க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெண்டைக்காயை அதிகளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

 

இங்கு சாகுபடி ஆகும் வெண்டைக்காய்கள், கேரளா வழியாக துபாய்க்கு ஏற்றுமதியாகிறது. இந்த நிலையில், வழக்கத்தை விட, நடப்பாண்டு வெண்டைக்காய் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வெண்டைக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்திருந்தது. வெண்டைக்காய்க்கு உரிய விலைக் கிடைக்காத நிலையில், அதனை பெரும்பாலான விவசாயிகள் ஏரிகளிலும், நீர்நிலைகளிலும் கொட்டியதைக் காண முடிந்தது. அதேசமயம், சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் வெண்டைக்காயை பொதுமக்கள் கிலோ கணக்கில் வாங்கிச் சென்றதைக் காண முடிந்தது.

 

இந்த நிலையில், தேவூர் பகுதியில் விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கடந்த ஒரு மாதங்களாக வெண்டைக்காய்களை கிலோ ரூபாய் 4- க்கு வாங்கிச் சென்ற நிலையில், நேற்று (அக்.04) ஒரே நாளில் 10 ரூபாய் அதிகரித்து ரூபாய் 14- க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.