சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே புத்திரகவுண்டம்பாளையத்தில் 146 அடி உயரத்தில் உள்ள உலகிலேயே மிக உயரமான முத்துமலை முருகன் கோயிலில் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வழிபாடு நடத்தினார்.
அ.தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. உறுப்பினர் ஜெயசங்கரன் ஆகியோரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஏத்தாப்பூர் பேரூராட்சியில் சாலை அமைக்கும் பணிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
முத்துமலை முருகன் கோயில் வளாகத்தில் இந்த அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, முத்துமலை முருகன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு யாகத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். முன்னதாக, கோயிலுக்கு வருகைத் தந்த எடப்பாடி பழனிசாமிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரணக் கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
முருகன் சிலைக்கு பன்னீர் அபிஷேகம் செய்த அவர், தியான பீடத்தில் வழிபாடு செய்தார். இதைத் தொடர்ந்து, 21 அடி உயர தங்கத்தேரை இழுத்து, சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இந்த விழாவில், சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெய்சங்கரன், நல்லதம்பி, ராஜமுத்து மற்றும் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


