கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், மன்னார்காடு, வடகோட்டத்துறை பகுதியை சேர்ந்த வீராசாமி (வயது 33) என்பவர் அதே பகுதியை சேர்ந்த மிளகு வியாபாரம் செய்து வரும் முகமது அலி என்பவரிடம் ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், மிளகு வாங்குதற்காக முகமது அலியிடம் இருந்து கடந்த 2015- ஆம் ஆண்டு ஜூன் 11- ஆம் தேதி ரூபாய் 24,40,000 பெற்றுக் கொண்டு 407 வாகனத்தின் மூலம் சேலம் மாவட்டம், ஏற்காடு, செம்மநத்தம் பகுதியைச் சேர்ந்த மிளகு தரகர் சண்முகம் மூலமாக கொல்லிமலைக்கு மிளகு வாங்க கடந்த 2015- ஆம் ஆண்டு ஜூன் 12- ஆம் தேதி சென்றுக் கொண்டிருந்துள்ளார்.
தரகர் சண்முகம் பனமரத்துப்பட்டியில் உள்ள தரகர் மூலமாக மிளகு வாங்க அவரை அழைத்து செல்லாம் என கூறி பனமரத்துப்பட்டி சென்ற போது ஏரிகரை அருகில் இரவு 12.45 மணிக்கு சண்முகம் சிறுநீர் கழிப்பதற்காக கீழே இறங்கியவர் மீண்டும் வாகனத்தில் அவர் ஏறவில்லை.
அப்போது ஆம்னி வேன் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 10 நபர்கள் 1) சந்திரன், 2) பாஸ்கரன், 3) கார்த்திக், 4) ஆசோகன், 5) சந்திரகுமார், 6) ராஜசேகரன், 7) சிவக்குமார், 8) சண்முகம், 9) சந்திரன், 10) இளயராஜ ஆகியோர் சேர்ந்து வண்டியை வழிமறித்து வீராசாமி வைத்திருந்த ரூபாய் 24,40,000 பணத்தை பிடிங்கி கொண்டு வாகனத்தைச் சேதப்படுத்தி சென்றுள்ளனர். இது தொடர்பாக, சேலம் பனமரத்துபட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டு, அப்போதைய மல்லூர் வட்ட காவல் ஆய்வாளர் குலசேகரனால் அவர்கள் 10 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கானது சேலம் கூடுதல் அமர்வு நீதிமன்றம்-2ல் விசாரணையில் இருந்தது. சாட்சிகளின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு இன்று (பிப்.15) சேலம் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ரவி மேற்கண்ட பாஸ்கரன், கார்த்திக், சண்முகம் ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 5,000 அபராதம் விதித்தும், இளையராஜா என்பவர் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில், சந்திரன், அசோகன், சந்திரகுமார், ராஜசேகரன், சிவக்குமார், சந்திரன் ஆகியோர்களை வழக்கில் இருந்து விடுவித்தும் தீர்ப்பு வழங்கினார்.


