ட்ரெண்டிங்

மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!

சேலம் மாவட்டம், சங்ககிரி- கொங்கணாபுரம் செல்லும் சாலையில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தை மாற்றியமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த அமீர்ஷேக் என்ற 20 வயது இளைஞர், சங்ககிரிக்கு அருகே உள்ள ராஜாமணி தோட்டம் என்ற இடத்தில் மின் கம்பத்தில் ஏறி பணிகளைச் செய்துக் கொண்டிருந்தார். அப்போது, அவரை எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில், தூக்கி வீசப்பட்டார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த அமீர்ஷேக்கை சக தொழிலாளர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்ககிரி காவல் ஆய்வாளர் வளர்மதி வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவம், அவருடன் பணியாற்றிய தொழிலாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.