ட்ரெண்டிங்

பா.ம.க. எம்.எல்.ஏ. மீதான வரதட்சணை கொடுமை வழக்கு ரத்து!

பா.ம.க. எம்.எல்.ஏ. சதாசிவம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான வரதட்சணை கொடுமை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்துச் செய்து தீர்ப்பளித்துள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரும், பா.ம.க.வின் நிர்வாகியுமான சதாசிவம், அவரது மனைவி பேபி, மகன், மகள் ஆகியோர் மீது மருமகள் வினோலியா, சூரமங்கலம் காவல் நிலையத்தில் வரதட்சணை கொடுமை புகார் அளித்திருந்தார். இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் காவல்துறையினர் வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுச் செய்தனர்.

இந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் மற்றும் அவரது குடும்பத்தினர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், காவல்துறை சம்மன் அனுப்பிய நிலையில், காவல்துறை விசாரணைக்கு முதலில் ஆஜராகுமாறு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உத்தரவிட்டு, ஜாமீன் மனு மீதான வழக்கு விசாரணையை ஒத்திவைத்திருந்தது.

அதைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ. மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்டோர் சூரமங்கலம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இந்த நிலையில், எம்.எல்.ஏ. மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகியோர் முன்ஜாமீன் கோரிய மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (செப்.22) மாலை 04.00 மணிக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, குழந்தையின் நலனுக்காக கடந்த கால நிகழ்வுகளை மறந்து வாழ்க்கையைத் தொடர விரும்புவதாக மகன், மருமகள் உறுதியளித்தனர். இதையேற்ற நீதிபதி, குழந்தை பிறந்தநாளில் தாய், தந்தையரைச் சேர்த்து வைத்தது கோடி ரூபாய் கட்டணத்தை விட மேலானது எனத் தெரிவித்து, எம்.எல்.ஏ. மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான வரதட்சணை கொடுமை வழக்கை ரத்துச் செய்து தீர்ப்பளித்துள்ளார்.