ட்ரெண்டிங்

"மாணவ, மாணவிகள் திறமைகளை வளர்த்து உலக அளவில் பெரிய இடத்திற்கு வரவேண்டும்"- அமைச்சர் கே.என். நே

சேலம் மாவட்டம், சங்ககிரி மற்றும் ஆத்தூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் இன்று (ஆகஸ்ட் 03) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது, "தமிழ்நாடு முதலமைச்சர் மகளிரின் முன்னேற்றம் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் அடிப்படைத் தேவைகள் மற்றும் கல்வி முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, கல்வி மற்றும் மருத்துவத்தினை தனது இரு கண்கள் என்றுச் சொன்னார்கள். அந்தவகையில், கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் எளிமையாக பள்ளிக்குச் சென்று வர ஏதுவாக இரு பெரும் திட்டங்களான பேருந்து பயண அட்டைகள் மற்றும் மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளன. 


தமிழ்நாடு அரசில் பல்வேறு துறைகள் உள்ள நிலையில் வேறு எந்தத் துறைக்கும் இல்லாத அளவில் 2023-2024- ஆம் நிதியாண்டில் பள்ளிக் கல்வித்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ரூபாய் 40,299 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். இதன்மூலம் மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்த விளங்க வழிவகை செய்துள்ளார்கள். 


குறிப்பாக, மழலையர் பள்ளிக்கு வரும்போது உணவு அருந்தாமல் இருக்கக் கூடாது என்பதற்காக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படவுள்ளது. 

தமிழ்நாடு முதலமைச்சர் 1989- ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது பள்ளி மாணவ, மாணவிகள் இலவசமாக பேருந்துகளில் பள்ளிக்குச் சென்று வர வேண்டும் என்பதற்காக முத்தமிழறிஞர் கலைஞரிடம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் 8- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்பட்டன. மேலும், 1996- ஆம் ஆண்டு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் சேலம் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் அனைத்து கிராமங்களுக்கும் கூட்டுக் குடிநீர் திட்டம், நிலத்தடி நீரினை உயர்த்தும் வகையில் ஏரிகள் தூர்வாரும் பணி, ரூபாய் 800 கோடி செலவில் பாதாள சாக்கடைத் திட்டம், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் புதிய பாலங்கள் கட்டும் பணி தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கிடவும் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா, கொலுசு உற்பத்தியாளர்களுக்கான பன்மாடி உற்பத்தி மையம் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளார்.


சேலம் மாவட்டத்தில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2022- 2023-ஆம் கல்வியாண்டில் 11-ஆம் வகுப்பு பயின்ற 8,852 மாணவர்களுக்கும், 13,127 மாணவிகளுக்கும் ஆக மொத்தம் 21,979 மாணவ, மாணவிகளுக்கு ரூபாய் 10.59 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது. அந்தவகையில், இன்றைய தினம் சங்ககிரி மற்றும் ஆத்தூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் 2022-23-ஆம் கல்வியாண்டில் 11-ஆம் வகுப்பு பயின்ற 764 மாணவர்கள் மற்றும் 1,351 மாணவிகள் என மொத்தம் 2,115 மாணவ, மாணவிகளுக்கு ரூபாய் 1,01,74,360 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. 

மாணவ, மாணவிகள் அனைவரும் தங்களுடைய திறமைகளை மேலும் மேலும் வளர்த்து, உலக அளவில் பெரிய இடத்திற்கு வரவேண்டும், இதன்மூலம் எங்களுக்கும் பெருமை கிடைக்கும். மேலும், தியாகி தீரன் சின்னமலைக்கு வீரவணக்கம் செலுத்தும் இந்நாளில் உங்களுக்கு மிதிவண்டிகள் வழங்குவதில் மிகவும் பெருமை அடைகிறேன்." இவ்வாறு அமைச்சர் கே.என். நேரு பேசினார்.


இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், இ.ஆ.ப, மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ், மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, இ.ஆ.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ இ.ஆ.ப., சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், துணை மேயர் சாரதாதேவி, முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். சிவலிங்கம், வருவாய் கோட்டாட்சியர்கள் லோகநாயகி, சரண்யா, முதன்மைக் கல்வி அலுவலர் மு.கபீர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முருகன், மாவட்ட கல்வி அலுவலர் நாகராஜன், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.