ஆன்மிகம்

வி.என்.பாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் கோலாகலமாக நடந்த மஹா கும்பாபிஷேகம்!

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலின் மஹா கும்பாபிஷேக விழா, ஆகஸ்ட் 7- ஆம் தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. 
அதைத் தொடர்ந்து, நாள்தோறும் பல்வேறு யாகசாலைப் பூஜைகளும், ஹோமமும் நடைபெற்றது. 

இதையடுத்து, காசி, ராமேஸ்வரம், தீர்த்தமலை, பவானி கூடுதுறை ஆகிய இடங்களில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. அதைத் தொடர்ந்து, நேற்று (ஆகஸ்ட் 20) காலை இரண்டாவது யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்களை ஓத கோபுரக் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

அதைத் தொடர்ந்து, மாரியம்மன், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த மஹா கும்பாபிஷேக விழாவில், சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்தும், சங்ககிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். 

கோயில் நிர்வாகம் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. மஹா கும்பாபிஷேகத்தையொட்டி, சங்ககிரி காவல்துறையினர் சுமார் 100- க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.