ட்ரெண்டிங்

தலைமையாசிரியர் வீட்டில் தங்கநகைகள், பணம் கொள்ளை!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் தம்பதி நாகராஜன் (வயது 55)- புஷ்பா. இதில், நாகராஜன் ஆத்தூர் நகராட்சியில் வருவாய் ஆய்வாளராகப் பணிபுரிந்து வரும் நிலையில், இவரது மனைவி புஷ்பா, சீலியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

 

கடந்த செப்டம்பர் 29- ஆம் தேதி நாகராஜன் மற்றும் புஷ்பா தம்பதி தங்களின் மகளைப் பார்ப்பதற்காக, வீட்டைப் பூட்டிவிட்டு, சென்னைக்கு சென்றுள்ளனர். பின்னர், நாகராஜன் மட்டும் நேற்று (அக்.01) காலை சேலம் திரும்பிய நிலையில், வீட்டிற்கு சென்ற அவருக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது.

 

வீட்டின் முன்பக்க கதவு லேசாகத் திறந்திருப்பதைப் பார்த்து, உள்ளே சென்ற நாகராஜன், படுக்கை டிராயர்கள் மற்றும் பீரோவில் இருந்த 30 பவுன் தங்கநகைகள் மற்றும் ரூபாய் 40,000 ரொக்கம் கொள்ளைப் போனது தெரிய வந்தது. இதையடுத்து, ஆத்தூர் டவுன் காவல் நிலையத்தில் நாகராஜன் புகார் அளித்தார்.

 

ஆத்தூர் காவல் நிலைய துணை சூப்பிரண்டு நாகராஜன், காவல் உதவி ஆய்வாளர்கள் மகாலிங்கம், செந்தமிழ்நாதன், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரில் ஆய்வு நடத்தி, விசாரணை மேற்கொண்டனர். அத்துடன், சம்பவம் குறித்து வழக்குப்பதிவுச் செய்துள்ள காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.