ட்ரெண்டிங்

கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள், பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் வேண்டுகோள்! 

சேலம் மாநகராட்சியில் உள்ள அனைத்து கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தமிழ்நாடு மனித கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு விதிகள் 2022 மற்றும் தமிழ்நாடு கழிவுநீர் மேலாண்மை ஒழுங்குமுறை மற்றும் செயல்பாடு வழிகாட்டுதல்கள், 2023- ன்படி சேலம் மாநகராட்சி பகுதிகளில் கழிவுநீர் சேகரிப்பு தொட்டியிலிருந்து கழிவுநீரை இயந்திரங்களைக் கொண்டு பாதுகாப்பான முறையில் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்வது குறித்த கலந்தாய்வு கூட்டம் ஆணையாளர் பாலசந்தர்,இ.ஆ.ப. தலைமையில் நடைபெற்றது. 


கூட்டத்தில் பேசிய மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், "கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்ய எந்தவொரு சூழ்நிலையிலும் தனிநபரை நேரடியாகவே அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுத்துவது முற்றிலுமாகத் தடைச் செய்யப்பட்டுள்ளது. இதனை பின்பற்ற தவறும் தனியார், ஒப்பந்ததாரர், வாகன உரிமையாளர்களில் முதன்முறையாக மீறுவோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூபாய் 2 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். 

இரண்டாவது முறையாக மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூபாய் 5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும். தேவையான அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும், சாதனங்களும் வாகனத்தில் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கழிவுநீர் அகற்றும் பணியாளர்கள் பிரதிபலிப்பு ஆடை (ஏப்ரான்), கம்பூட்ஸ், பாதுகாப்பு கையுறை, தலைக்கவசம், முகக்கவசம், கண்ணாடிகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அணிவதை வாகன உரிமையாளர் மற்றும் வீட்டின் உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். கழிவுநீர் தொட்டியில் கழிவுநீர் அகற்றும் சேவைகளுக்கு உரிமம் பெற்ற ஊர்திகளை மட்டுமே மக்கள் பயன்படுத்த வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார்.


இந்த கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர்  அசோக்குமார், துணை இயக்குநர்/ மாநகர நல அலுவலர் யோகானந், அனைத்து சுகாதார அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர், அனைத்து கழிவுநீரகற்றும் வாகன உரிமையாளர் மற்றும் ஒட்டுநர்கள் பங்கேற்றனர்.