ட்ரெண்டிங்

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து சரிவு... விவசாயிகள் கவலை!

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருவதால், டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

 

தமிழகம்- கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வந்ததால், சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 7,500 கனஅடி வரை அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 6,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால், அணைக்கான நீர்வரத்தை விட நீர்திறப்புக் குறைந்து இருந்ததால், அணையின் நீர்மட்டம் சற்று உயரத் தொடங்கியது.

 

இந்த நிலையில், தமிழகம்- கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை குறைந்து வருவதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக, குறைந்து வருகிறது. வினாடிக்கு 4,524 கனஅடியாகத் தண்ணீர் வந்துக் கொண்டிருந்த நிலையில், இன்று (அக்.01) காலை 08.00 மணி நிலவரப்படி வினாடிக்கு 3,446 கனஅடியாகக் குறைந்துள்ளது.

 

இதன் காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 37.50 அடியில் இருந்து 36.94 அடியாகக் குறைந்துள்ளது. அணைமின் நிலையம் வழியாக வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீரும், கீழ்மட்ட 5 கண் மதகு வழியாக வினாடிக்கு 3,500 கனஅடி தண்ணீர் என மொத்தம் வினாடிக்கு 6,500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.