1977- ஆம் ஆண்டு சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், குறுக்கப்பட்டி கிராமத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட புலியின் தோல் இங்கே காட்சியில் அமைக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட வனப்பகுதிகளில் தற்போது புலிகள் இல்லை. ஆனால் இந்த புலியானது சேர்வராயன் அல்லது கொல்லிமலைப் பகுதிகளில் இருந்து வந்திருக்கலாம். குறுக்கப்பட்டி கிராம மக்களுக்கு பெரும் தொல்லையினை கொடுத்த இந்த புலியினை சுட முற்படும்போது மேட்டூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அப்துல்லாவை புலி தாக்கி காயப்படுத்தியது. அப்போது காவலர் ஆறுமுகம் திறமையாகப் புலியை சுட்டு வீழ்த்தினார். தோலின் 10 அடி, எனவே சுட்டு வீழ்த்தப்பட்ட 10 அடி நீளம் கொண்ட மிகப் பெரிய புலியாக இருந்துள்ளது.
அப்படியே சில நூற்றாண்டுகள் பின்னே செல்வோம். இது போல புலியுடன் ஏற்பட்ட போரில் உயிர்நீத்த வீரர்களுக்காக எடுக்கப்பட்ட நடுகற்கள் தான் சேலம் அம்மாப்பேட்டை ரிலையன்ஸ் அருகில் உள்ள புலிகுத்தி சாமி கோயில், புலிக்குத்தி தெருவில் உள்ள வீரக்கல், வலசையூர் வீராணம் செல்லும் பாதையில் உள்ள வீரக்கல் எல்லாம்...சேலம் மாவட்டம் முழுவதும் பல புலிக்குத்தி வீரக்ககற்கள் உள்ளன.
ஆனால் அவ்வீரர்கள் கையில் ஈட்டி குறுவாள் ஆகியன இடம் பெற்றிருக்கும்.. காலம் மாறும்போது ஆயுதமும் மாறுகிறது. அப்பொழுது ஈட்டி...இப்பொழுது துப்பாக்கி...
இது இப்படி இருக்க சேலம் மாவட்டம் அறுநூத்துமலை பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் சிலை செதுக்கப்பட்டுள்ளது.இவர் என்ன விலங்கைக் கொன்றார் என யூகிக்க முடியவில்லை. மேற்கண்ட நிகழ்வின் மூலமாக இதுபோல நவீன நடுகல் வீரர்களும் இருப்பார்கள் எனக் கருத வேண்டியுள்ளது.
யானைகள் வந்து நீர்குடிக்கும் பகுதி ஆதலால் ஆனைமடுவு எனவும், ஒரு காலத்தில் யானைகள் கூட்டம் கூட்டமாய் இருந்த ஆனை வாரி முட்டல் என்னும் பகுதி இவற்றையெல்லாம் இன்று பெயரளவில் மட்டுமே வைத்துள்ளோம். ஏற்காட்டில் சிவிங்கிப் புலி (cheetah) மிகச் சாதாரணமாய் கண்ணில் படும் என்கிறது 1926- ல் ஜகதீச ஐயரால் எழுதப்பட்ட 'சேலம் ஜில்லா சரித்திரம்.
இன்று கூட காடையாம்பட்டி பகுதியில் (அதுவும் வனப்பகுதிதான்) நுழைந்த சிறுத்தை குறித்து கவலை கொண்டு கூண்டு வைத்துள்ளோம்.
எது எப்படியோ! இயற்கை ஆர்வலர் என்கிற முறையில், ஒருகாலத்தில் எப்படி வளமாய் இருந்தோம்...ஒரு நூற்றாண்டிலேயே இப்படி பல உயிரினங்களை தொலைத்தோம் எனக் கவலை கொள்ள வேண்டியுள்ளது.


-SXgDfGgJfO.jpg)