ட்ரெண்டிங்

சேலம் ஆட்சியருடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை! 

சேலம் மாவட்டத்தில் கோடை காலத்தில் சீரான குடிநீர் விநியோகம் வழங்குவதை உறுதிச் செய்யும் வகையில் சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப., சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. உடன் நேற்று (மே 06) ஆலோசனை மேற்கொண்டார்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள சூழ்நிலையில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர், தடையில்லா மின்சாரம், மருத்துவ உதவிகள், தீ தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, தொழிற்சாலை தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் சாலைப் பணியாளர்கள், திறந்த இடங்களில் வேலை செய்பவர்களுக்கு போதுமான குடிநீர். நிழல் மற்றும் தங்குமிடங்கள் மற்றும் பணியிடத்தில் முதலுதவி வசதிகள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டது. 

மேலும், மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் கோடை காலங்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகள் இருப்பதைத் தொடர்புடைய அலுவலர்கள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டது. பேருந்து நிலையம், மார்க்கெட் போன்ற இடங்களில் குடிநீர் பந்தல் அமைத்து சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டுமெனவும், நீர் பந்தல்களில் கூடுதலாக விநியோகிக்கப்படும் ஓ.ஆர்.எஸ் பாக்கெட்டுக்கள் போதுமான அளவு பொதுமக்களுக்கு வழங்குவதை உறுதி செய்திட வேண்டுமெனவும் அலுவலர்களுடனான இந்த ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், காட்டுத்தீ பரவாமல் தடுக்க போதுமான நடவடிக்கைகளை வனத்துறையினர் எடுக்க வேண்டும். காட்டுத்தீயால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய இடங்களைத் தொடர்ந்துக் கண்காணித்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதை அலுவலர்கள் தொடர்ந்து உறுதி செய்திடவும், வெப்ப அலை அதிகம் உள்ள நேரங்களில் பொதுமக்களிடையே உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அவசியமின்றி இத்தருணங்களில் வெளியில் செல்வதை தவிர்த்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மரு.அலர்மேல்மங்கை இ.ஆ.ப உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.