ட்ரெண்டிங்

போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் எடுத்த இலங்கை அகதிகள் கைது!

போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் எடுத்த இரண்டு இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டனர்.

 

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த சிலர், போலியாக ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் எடுத்ததாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், பாஸ்போர்ட் எடுத்தவர்களின் தகவல்களை ஆய்வுச் செய்த போது, தேவேந்திரன் என்பவர் செந்தாரப்பட்டியில் உள்ள அங்கமுத்து மூப்பனார் தெருவில் வசிப்பதாக போலியான ஆவணங்கள் கொடுத்து அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பாஸ்போர்ட் எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.

 

இவரது தந்தை ராஜகோபால் கடந்த 1984- ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஜயனாந்த் என்பவரும் நாக்கியம்பட்டியில் உள்ள அகதிகள் முகாமில் தனது பெயரையும், தனது குடும்பத்தினர் பெயரையும் நீக்கம் செய்து, இதே தெருவில் வசித்ததாக போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் எடுத்தது அம்பலமானது.

 

இதனையடுத்து, அவர்களை கைது செய்த தம்மம்பட்டி காவல்துறையினர், அவர்களிடம் இருந்து ஐந்து பாஸ்போர்ட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.