ட்ரெண்டிங்

இளம்பிள்ளையில் விசைத்தறிக் கூடங்களை நேரில் பார்வையிட்ட இலங்கை துணைத் தூதர்!

சேலைகளுக்கு பெயர் போனது சேலம் மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளை. இங்கு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் விசைத்தறியில், காட்டன், பட்டு ஆகிய வகையான சேலைகளை உற்பத்திச் செய்து வருகின்றனர். இங்கு உற்பத்தியாகும் சேலைகள், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, குஜராத், ஒடிஷா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் அதிகளவில் சேலைகளை உற்பத்திச் செய்யும் ஒரே இடமென்றால் அது இளம்பிள்ளை தான். விசைத்தறி தொழிலைச் சார்ந்து 1,000- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அதேபோல், சேலம் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பொதுமக்களும் திருமணம் உள்ளிட்ட விஷேச நிகழ்ச்சிகளுக்கு இங்கு வந்து  சேலைகளை எடுத்துச் செல்கின்றனர். 

இந்த நிலையில், தென்னிந்தியாவிற்கான இலங்கைத் துணைத் தூதர் வெங்கடேஸ்வரன், இளம்பிள்ளைக்கு வருகை தந்தார். அதைத் தொடர்ந்து, விசைத்தறிக் கூடங்களுக்கு சென்ற தூதர் வெங்கடேஸ்வரன், ஜவுளி உற்பத்திச் செய்யப்படுவது குறித்தும், அதற்கு பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்தும் பார்வையிட்டார். அத்துடன், விசைத்தறிக் கூடங்களின் உரிமையாளர்களுடன் கலந்துரையாடிய, இலங்கை துணைத் தூதர் வெங்கடேஸ்வரன், இலங்கையில் ஜவுளி உற்பத்திச் செய்ய முன்வந்தால், தேவையான அனைத்து வசதிகளும் செய்துத் தரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.  

இலங்கைத் துணைத் தூதரின் வருகையையொட்டி, இளம்பிள்ளையில் காவல்துறையினர், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.