சேலத்தில் உள்ள பிரபல் தனியார் பள்ளிக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா செல்லும் வழியில் பிரபல தனியார் பள்ளி அமைந்துள்ளது. இன்று (ஆகஸ்ட் 29) காலை 09.00 மணிக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர்கள் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து பெற்றோர்களுக்கு தகவல் செல்லவே, அவர்கள் உடனடியாக பள்ளிக்கு விரைந்து தங்களது குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
இதனிடையே, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக, சேலம் மாநகர காவல்துறைக்கு பள்ளி நிர்வாகம் அளித்த தகவலின் பேரில், பள்ளிக்கு விரைந்த காவல்துறை உயரதிகாரிகள், மோப்ப நாய்கள் உதவியுடன் பள்ளியில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் பள்ளி அமைந்துள்ள பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, பள்ளிக்கு இன்று (ஆகஸ்ட் 29) ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து அறிவித்துள்ளது. பேருந்துகள் மூலம் பள்ளி வருகைத் தந்த மாணவர்கள், வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் திருச்சி கள்ளக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள தி இந்தியன் பப்ளிக் பள்ளிகளுக்கும் மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


