ட்ரெண்டிங்

ஏற்காடு எங்கள் பெருமை விழிப்புணர்வு நடைப்பயணம்- முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் கார்

ஏற்காடு எங்கள் பெருமை விழிப்புணர்வு நடைப்பயணம் நாளைய தினம் (செப்.23) ஏற்காடு அடிவாரத்தில் தொடங்கப்படவுள்ளதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தலைமையில் இன்று (செப்.22) காலை 11.00 மணிக்கு  நடைபெற்றது.

தமிழ்நாட்டில் கிழக்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஏற்காடு ஒரு சிறந்த மலைவாழ் இடம். இது சேலம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் பிரதேசமாக அமைந்துள்ளது. ஏற்காடு மலைப்பகுதியின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடும் இத்தருணத்தில் பிளாஸ்டிக் பயன்பாடற்ற, பசுமையான தூய்மையான ஏற்காட்டை உருவாக்குவது மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய பணித் திட்டமாக உள்ளது. இதனை அடைய பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாக உள்ளது. அந்தவகையில், எற்காடு எங்கள் பெருமை என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு விழிப்புணர்வு நடைப்பயணம் நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வு நடைப்பயணம் நாளைய தினம் ஏற்காடு அடிவாரம் முதலாவது வளைவில் இருந்து காலை 06.00 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. ஏற்காடு அடிவாரத்தில் தொடங்கப்படும் இந்நடைப்பயணமானது 60 அடி பாலம் வரை சென்று மீண்டும் ஏற்காடு அடிவாரம் வந்துசேரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விழிப்புணர்வு நடைப்பயணத்தையொட்டி, நாளையதினம் காலை 06.00 மணி முதல் காலை 10.00 மணி வரை அஸ்தம்பட்டி வழியாக, ஏற்காடு மேல்நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும், ஏற்காடு- குப்பனூர் சாலையைப் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்காடு எங்கள் பெருமை எனும் இவ்விழிப்புணர்வு நடைப்பயணத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தால் பங்கேற்புச் சான்றிதழ், டி- சர்ட் மற்றும் காலை சிற்றுண்டி வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள், சுற்றுச்சூழல் தன்னார்வலர்கள், மாணவர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், நடைப்பயண ஆர்வலர்கள் என விருப்பமுள்ள அனைவரும் இதில் கலந்து கொண்டு நெகிழிப் பயன்பாடற்ற, பசுமையான, தூய ஏற்காட்டை உருவாக்கிட வேண்டுமென மாவட்ட ஆட்சியரால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வு நடைபயணத்தில் கலந்து கொள்பவர்கள் ஏதாவது ஒரு அடையாள அட்டை எடுத்து வரவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெறவுள்ளதையொட்டி, வனத்துறை, மருத்துவத் துறை, மாசுக்கட்டுப்பாடு வாரியம், வருவாய்த்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை, காவல் துறை, போக்குவரத்துத் துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் காஷியப் ஷஷாங் ரவி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் கீதா பிரியா, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் இரவிக்குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.