ஆன்மிகம்

ஆடித்திருவிழா- சேலம் கோயில்களில் தீமிதித்து நேர்த்திக் கடனை நிறைவேற்றிய பக்தர்கள்! 

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழாவை மக்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், இன்று (ஆகஸ்ட் 09) கரிநாளையொட்டி, அதிகாலை முதலே ஆடு, கோழி, மீன் ஆகிய இறைச்சிக் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் இறைச்சிக் கடைகளின் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். வெளியூர்களில் இருந்து வந்த உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் விருந்து வைத்து உபசரித்தனர். 

அதேபோல், சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள பலப்பட்டரை மாரியம்மன் கோயில், செங்குந்தர் அருள்மிகு மாரியம்மன் கோயில், மற்றும் காமராஜர் நகர் காலனியில் உள்ள அருள் சக்தி மாரியம்மன் கோயில், குகை மாரியம்மன் காளியம்மன் கோயில் ஆகிய கோயில்களில் தீமிதி விழா நடைபெற்றது. இதற்காக விரதமிருந்த பக்தர்கள் ஏராளமானோர், அக்னி குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். 

தீமிதி விழா நடைபெற்ற இடங்களில் முன்னெச்சரிக்கையாக, தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். 

அதைத் தொடர்ந்து, இன்று (ஆகஸ்ட் 09) மாலை 05.00 மணி முதல் அழகு குத்தி ஊர்வலமாகச் செல்லும் நிகழ்வும் நடைபெற்றது. அம்மாப்பேட்டையில் பொதுமக்களின் கூட்டம் காரணமாக, பொதுபோக்குவரத்து மாலை மட்டும் மாற்றியமைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, அம்மாப்பேட்டை, குகை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.