ஆன்மிகம்

அக்.27- ஆம் தேதி சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெறும்-அமைச்சர் சேகர்ப

சேலம் மாநகரில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற கோட்டை மாரியம்மன் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (செப்.14) காலை 08.00 மணிக்கு நேரில் ஆய்வு மேற்கொண்டார். அத்துடன், கோயில் திருப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, கோட்டை மாரியம்மனை தரிசித்த அமைச்சருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

 

இந்த நிகழ்வின் போது, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப., சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், தி.மு.க.வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான ராஜேந்திரன், சேலம் மாவட்ட இந்து சமய அறங்காவலர் குழுத் தலைவர் முருகன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு, "ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயில்களில் மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் மஹா கும்பாபிஷேகம் நடத்துவதற்கான திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சில கோயில்களில் திருப்பணிகள் நிறைவுற்று மஹா கும்பாபிஷேக விழாவும் நடத்தி முடிக்கப்பட்டது.

 

குறிப்பாக, 400 ஆண்டுகளுக்குப் பிறகு திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கு இந்த ஆட்சியில் தான் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அந்த வகையில், சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் வரும் அக்டோபர் மாதம் 27- ஆம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெறும். அதேபோல், சுமார் 4.5 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட கோட்டை மாரியம்மன் கோயிலின் தங்கத்தேர் திருவிழா உலாவும் நடைபெறும்.

 

சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோயிலுக்கு 1993- ஆம் ஆண்டு ராஜகோபுரத்திற்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த திருக்கோயிலுக்கு வரலாற்றில் மஹா கும்பாபிஷேகங்கள் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.