தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, சேலம் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள், சிறுவர், சிறுமிகள் விநாயகர் சதுர்த்தி விழாவை வெகு விமர்சையாகக் கொண்டாடி வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சேலம் மாவட்டம் முழுவதும் 1,915 விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. சேலம் புறநகர் பகுதிகளான ஆத்தூர், சங்ககிரி, மேட்டூர், ஓமலூர், வாழப்பாடி ஆகிய 5 உட்கோட்டங்களில் 1,050 சிலைகளும், சேலம் மாநகர் பகுதிகளான அம்மாப்பேட்டை, பொன்னம்மாப்பேட்டை, பட்டைக்கோவில், அஸ்தம்பட்டி, வின்சென்ட், குகை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், நான்கு ரோடு, ஐந்து ரோடு உள்ளிட்டப் பகுதிகளில் 865 சிலைகளும் வைக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு,பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டுள்ளது.
பெரிய பந்தல்களில் தோரணங்கள், வாழைத்தார்கள், அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட்டு, பல்வேறு வடிவிலான விநாயகர்கள் வைக்கப்பட்டிந்தது, பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


