தந்தை பெரியாரின் 145- வது பிறந்தநாளையொட்டி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வீட்டுவசதித்துறை, நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், தி.மு.க.வினர் சமூகநீதி நாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். அப்போது, மூட நம்பிக்கைகளை ஒழித்து மானுடம் காக்க பெரியார் வழியில் அயராது உழைப்போம் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப., தி.மு.க.வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் கட்சியின் நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


