சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்வே குடியிருப்புகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் தூய்மை இந்தியா திட்ட இருவார கால முகாமினை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்கா தொடங்கி வைத்தார்.
வரும் அக்டோபர் 2- ஆம்தேதி மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள் கொண்டாடப்படுவதையொட்டி, நாடு முழுவதும் ரயில்வேத்துறை ஸ்வச்சதா பக்வாரா எனும் தூய்மை இந்தியா' திட்ட இருவார கால திட்ட முகாமினை நடத்துகிறது. இதற்கான தொடக்க விழா சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் இன்று (செப்.16) காலை 11.00 மணிக்கு நடைபெற்றது.
சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்கா தலைமையில் நடந்த விழாவில், அனைத்து ரயில்வே பிரிவுத் தலைவர்கள், அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு பிரிவு போலீசார் தூய்மை இந்தியா திட்ட உறுதிமொழி ஏற்றனர். தங்களை சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வது, ரயில் நிலையங்கள், ரயில்வே குடியிருப்புகள் மற்றும் ரயில்களை தூய்மையாக வைத்துக் கொள்வது, தூய்மையின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட உறுதிமொழியினை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்கா வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
இதனையடுத்து, சாரணர் படை மாணவர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர் பங்கேற்ற தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணியை, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்கா கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழாவில் சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
செப்டம்பர் 16- ஆம் தேதி முதல் அக்டோபர் 2- ஆம் தேதி வரை சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் அனைத்து ரயில் நிலையங்களிலும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், தூய்மைப்பணிகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


