ட்ரெண்டிங்

பொது இடத்தில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டிய மருத்துவமனைக்கு அபராதம் விதிப்பு!

சேலத்தில் பொது இடத்தில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டிய மருத்துவமனைக்கு ரூபாய் 10,000 அபராதம் விதித்து சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் உத்தரவிட்டுள்ளார். 

 

சேலம் மாநகராட்சிக்குட்பட்டப் பகுதிகளில்

செயல்பட்டு வரும் மருத்துவமனைகளில் உருவாகும் கழிவுகளை அந்தந்த மருத்துவமனைகளே தரம் பிரித்து மக்கும் மற்றும் மக்காத கழிவுகளை மாநகராட்சி பணியாளர்களிடமும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனத்திடம் வழங்கிடவும் பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

மாநகராட்சிப் பகுதிகளில் சில தனியார் மருத்துவமனைகள் மருத்துவ கழிவுகளை

மற்ற கழிவுகளுடன் சேர்த்து பொது இடங்களில் கொட்டுவதாக புகார்கள் வந்ததன் அடிப்படையில் சூரமங்கலம் உதவி ஆணையாளர் தலைமையில் சுகாதார அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்ட போது, குரங்குச்சாவடி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனை, மருத்துவக் கழிவுகளை சேகரம் செய்ய நியமிக்கப்பட்டுள்ள நிறுவனத்திடம் மருத்துவக் கழிவுகளை முறையாக ஒப்படைக்காமல் திடக்கழிவுகளுடன் பொது இடங்களில் கொட்டுவது கண்டறியப்பட்டது. அதனடிப்படையில் மருத்துவக் கழிவுகளை முறையாக ஒப்படைக்காத தனியார் மருத்துவமனைக்கு ரூபாய் 10,000 அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் உத்தரவிட்டுள்ளார்.