சேலம் மாவட்டம், ஓமலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் விளையாட்டுப் போட்டிக்கான மைதானம் பள்ளி மாணவர்களை வைத்தே தயார் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
ஓமலூர் மைய பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் தடகள விளையாட்டு போட்டிகள் இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ளன. 46 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கக் கூடிய இந்த விளையாட்டுப் போட்டிக்கான மைதானத்தில் முன்னேற்பாடுகள் எதுவும் செய்யப்படாத நிலையில், கற்கள், முள் செடிகளை வெட்டுவது, பாறைகளைக் கடப்பாரையைக் கொண்டு அகற்றுவது உள்ளிட்ட வேலைகளை மாணவர்கள் கையுறைகள் உள்பட எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி அகற்றியது தெரிய வந்தது.
மாணவர்கள் விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்வது, விழா மேடையை சுத்தம் செய்வது தொடர்பான வீடியோக்கள் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகி மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள், சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


