பா.ம.க.வின் சேலம் மாநகர் மாவட்டச் செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அருள், இன்று (மார்ச் 13) பள்ளி கட்டிட பூமி பூஜை விழாவில் பங்கேற்க சென்ற போது தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பா.ம.க.வின் தலைவர் மருத்துவர்.ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலத்தில் பா.ம.க. சட்டமன்ற உறுப்பினரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்குவதா? தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!
சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி பாலக்குட்டப்பட்டியில் ரூபாய் 4.5 கோடியில் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் இன்று தொடங்கப்படுவதைப் பார்வையிடுவதற்காகச் சென்ற பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் அருளை தி.மு.க.வினர் தடுத்து நிறுத்தி தள்ளிவிட்டுள்ளனர்.சட்டமன்ற உறுப்பினரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.
பாலக்குட்டப்பட்டியில் பள்ளிக்கூடம் கட்டும் திட்டம் பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் அருளின் மூன்றாண்டு கால தொடர் முயற்சியால் கொண்டு வரப்பட்டது ஆகும். ஒரு சட்டமன்ற உறுப்பினரை அவரது தொகுதிக்குட்பட்ட பகுதியில் அவரது முயற்சியால் கொண்டுவரப்பட்ட திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொள்ளக்கூட விடாமல் தடுப்பது தான் பாசிசம் ஆகும். திமுகவினரின் பாசிசத்துக்கு மக்கள் முடிவு கட்டும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர் அருளை தாக்கியவர்கள் மீது தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


