ட்ரெண்டிங்

வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டதால் திறந்தவெளியில் வசிக்கும் மக்கள்- விரிவான தகவல்!

கோயில் நிலத்தில் வசித்து வந்தவர்கள் வெளியேற்றப்பட்டதால், அவர்கள் வாழ்விடமின்றித் திறந்தவெளியில் வசித்து வரும் சூழல் உருவாகியுள்ளது. 

சேலம் மாவட்டம், ஓமலூரில் இருந்து தாரமங்கலம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது சிக்கம்பட்டி கிராமம்.  இந்த கிராமத்தைச் சேர்ந்த  சுமார் 20 குடும்பத்தினர், தலைமுறை தலைமுறையாக கோயில் நிலத்தில் வீடுகளைக் கட்டிக் குடியிருந்து வருகின்றன. 

இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனர். அதன்படி,  இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதனால் ஏற்பட்ட அதிருப்தியில் சிலர் வாடகை வீடுகளுக்கு சென்ற நிலையில், சுமார் 10 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்விடம் இல்லாமல் மாட்டுக் கொட்டகையிலும், திறந்தவெளியிலும் உடைமைகள் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர்.  

வீடுகளை இழந்து வசித்து வரும் இந்த மக்கள் தாங்கள் வசித்த கோயில் நிலத்தை தங்களுக்கே குத்தகைக்கு விட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததுடன், அதற்கான தொகையை நிர்ணயம் செய்தால், அதனை செலுத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

இதனை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தமிழக அரசே செய்து தரவும் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடப் பாதிக்கப்பட்ட மக்கள் முடிவுச் செய்துள்ள நிலையில், அதற்கான உத்தரவைப் பெற்று வந்தால் உரிய முறையில் ஏற்பாடுகள் செய்து தரப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகின்றன. 

தங்களின் கோரிக்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுமா? இந்த பிரச்சனைக்கு தீர்வுக் கிடைக்குமா? என வீடுகளை இழந்தவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.