ட்ரெண்டிங்

மேட்டூர் அருகே மூதாட்டி படுகொலை....நகைகள், பணம் கொள்ளை!

சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த கொளத்தூர் ஏழுபரணை காட்டைச் சேர்ந்த முதிய தம்பதி ராமசாமி (வயது 70)- அத்தாயம்மாள் (வயது 65). இவர்கள் தங்கள் நிலத்தில் விவசாயத்தைச் செய்து வருகின்றனர். இவர்களுக்கு மல்லிகா (வயது 45) என்ற மகளும், பிரகாஷ் (வயது 40) என்ற மகனும் உள்ளனர். இருவருக்கும் திருமணமான நிலையில், கொளத்தூரில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்றிரவு (செப்.07) விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் தம்பதியினர் உறங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் ராமசாமி எழுந்து அருகில் உள்ள கொட்டகையில் உறங்கிக் கொண்டிருந்தார். 

அதிகாலை ராமசாமி எழுந்து வந்து பார்த்த போது, அத்தாயம்மாள் படுத்த நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்துக் கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ராமசாமி, மகள் மல்லிகாவிற்கு தகவல் கொடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து, மகள் வந்து பார்த்த போது, மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்கநகைகள், ரூபாய் 1.10 லட்சம் ரொக்கம் கொள்ளை போனது தெரிய வந்தது.

இதையடுத்து, கொளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்து மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அதைத் தொடர்ந்து, தொடர்ந்து, தடயவியல் அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீடு முழுவதும் ஆய்வு செய்து, கை ரேகைகளை கைப்பற்றினர். இதனிடையே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பவானி ஈஸ்வரி மற்றும் சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் ஆகியோர் விசாரணை நடத்தினர். 

மூதாட்டியைக் கொலைச் செய்த மர்மநபர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. அத்துடன், இரண்டு தனிப்படைகளையும் காவல்துறை அமைத்துள்ளது. அவர்கள் வாகன தணிக்கை மற்றும் வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.