ட்ரெண்டிங்

சேலம் நீதிமன்றத்தில் பிரபல ரவுடி சரண்!

 

பல்வேறு குற்ற வழக்குகளில் காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் தாம்பரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி லெனின் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

 

காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் அருகே சோமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பீமாராவ் மகன் லெனின் (வயது 36). பிரபல ரவுடியான இவர் மீது 7 கொலை வழக்கு உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், லெனின் சட்ட விரோதமாகத் துப்பாக்கி வைத்துள்ளதாக சோமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் அவரை தீவிரமாகத் தேடி வந்தனர்.

 

இந்நிலையில் சேலம் மாவட்டம், அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.4ல் லெனின் இன்று (நவ.01) சரணடைந்தார்.

 

அப்போது காவல்துறையே தன் மீது பொய் வழக்குகளைப் போட்டு போலி என்கவுன்டர் செய்ய திட்டமிட்டு வருவதாக லெனின் நீதிபதியிடம் குற்றம் சாட்டினார். இதையடுத்து நீதிபதி லெனினை ஆறு நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் பலத்த பாதுகாப்புடன் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.