ட்ரெண்டிங்

நியாய விலைக்கடைகள்.... அலுவலர்களுக்கு சேலம் ஆட்சியர் அறிவுறுத்தல்! 

சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டியில் உள்ள சொர்ணபுரி கூட்டுறவு பண்டக சாலையின் பாரதி நகர் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொது மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவது குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. இன்று (மே 30) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, பொதுமக்கள் அதிகம் பயனடையக்கூடிய அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கக் கூடிய அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் தரமாக வழங்கப்படுவதை உறுதிச் செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இன்றையதினம் சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டியில் உள்ள சொர்ணபுரி கூட்டுறவு பண்டக சாலையின் பாரதி நகர் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொது மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவது குறித்து ஆய்வு மேற்கொண்டு, அத்தியாவசியப் பொருட்கள் பெற வருகை தந்த பொதுமக்களிடம் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் தரம் குறித்து கேட்டறியப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 1,258 முழுநேரம் மற்றும் 474 பகுதிநேரம் நியாய விலைக்கடைகள் என மொத்தம் 1.732 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைகள், AAY அட்டைகள், சர்க்கரை விருப்ப அட்டைகள். காவலர் அட்டைகள், வன காவலர் அட்டைகள் உள்ளிட்ட 10.74,391 குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்திலுள்ள 10,74,391 குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் 15,124 மெ.டன் அரிசி, 1,446 மெ.டன் சர்க்கரை, 299 மெ.டன் கோதுமை, 0.48 இலட்சம் லிட்டர் மண்ணெண்ணெய். 861 மெ.டன் துவரம் பருப்பு 912 மெ.டன் பாமாயில் மற்றும் 2,616 மெ.டன் AAY அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகிறது.

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் அவர்கள் அளித்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதற்கிணங்க, குடும்ப அட்டைதாரர்கள் மே 2024 மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை ஜூன் மாதம் முதல் வாரம் வரை நியாய விலைக் கடைகளில் பெற்றுக்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களின் தரம், அளவு மற்றும் கடைகள் உரிய நேரத்தில் செயல்படுவதை உறுதி செய்யும் வகையில் அலுவலர்கள் தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.