ட்ரெண்டிங்

விபத்து நிகழ்ந்த இடத்திற்கு சென்று ஆட்சியர் கார்மேகம் நேரில் ஆய்வு!

சங்ககிரி அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவரின் குடும்பத்தினர் எட்டு பேர், இன்று (செப்.06) அதிகாலை 05.30 மணியளவில் கொண்டலாம்பட்டியில் இருந்து ஆம்னி வேன் மூலம்  பெருந்துறைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, சங்ககிரி அருகே உள்ள சின்னா கவுண்டனூர் பகுதியில் சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த லாரி மீது அதிவேகமாக வந்த ஆம்னி வேன் மோதியது.

 

இதில் வேனில் பயணம் செய்த செல்வராஜ், மஞ்சுளா, ஆறுமுகம், பழனிசாமி, பாப்பாத்தி மற்றும் ஒரு வயது குழந்தை உள்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த இரண்டு பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

பழனிசாமியின் மகளுக்கும், அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால், அதனை பேசித் தீர்த்து வைப்பதற்காக வந்தவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

இந்த நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப., நேரில் ஆய்வு செய்து, மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தியதுடன், உயிரிழந்தவர்களின் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

 

அதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை நேரில் சந்தித்த ஆட்சியர், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைக் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.