ட்ரெண்டிங்

குகைக் கோயிலில் கற்சிலை மாயம்- காவல்துறையினர் விசாரணை! 

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே தேவண்ணக் கவுண்டனூர் ஊராட்சி, வேலம்மாவலசு கிராமம் சித்தேஸ்வரன் கோம்பையில் கொங்கணச்சித்தர் குகைக்கோயில் உள்ளது. இக்கோயிலில் கி.பி. 12, 13- ஆம் நூற்றாண்டு வரை சமணர்கள் வாழ்ந்ததற்கான கல்வெட்டு உள்ளது. 

இங்கு கொங்கணச்சித்தர், முருகன், வள்ளி, தெய்வானை, மயில்வாகனம், அமிர்தலிங்கேஸ்வரர், ஸ்ரீபாலாம்பிகை, தட்சிணாமூர்த்தி, கருடாழ்வார் உள்ளிட்ட 14 கற்சிலைகள் உள்ளன. இங்கு அமாவாசை, பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். சங்ககிரி மற்றும் பல்வேறு  மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (ஜூன் 27) குகைக் கோயிலில் இருந்த கருடாழ்வார் ஒரு அடி கற்சிலையானது திடீரென காணவில்லை. இதுகுறித்து கோயிலைப் பராமரித்து வரும் பூசாரி பழனியப்பன் மற்றும் அவரது மகன் சக்திவேல் ஆகியோர் கருடாழ்வார் சிலையை வனம் முழுவதும் தேடியும் கிடைக்காததால் இந்து அறநிலைத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

அத்துடன், பூசாரி பழனியப்பன் சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப் பதிந்து குகைக் கோயிலுக்கு சென்று பார்வையிட்டு விசாரித்து வருகிறார். கொங்கணச்சித்தர் கோயிலில் சிலை காணாமல் போனதையொட்டி, சேலம் சிலை தடுப்புப் பிரிவு போலீசார் மற்றும் தட அறிவியல் துறையினர், கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். 

மேலும், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு வனப் பகுதியில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று நின்றது. வரலாற்று சிறப்புமிக்க கொங்கணச்சித்தர் குகைக்கோயிலில் சுவாமி சிலை திருடுபோனது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.