சேலம் மாவட்டம், மேட்டூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், பா.ம.க. நிர்வாகியுமான சதாசிவம் மற்றும் அவரது மனைவி, மகள், மகன் ஆகியோர் மீது சூரமங்கலம் காவல் நிலையத்தில் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக அவரது மருமகள் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து, எம்.எல்.ஏ. சதாசிவம் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட நான்கு பேர் மீது காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்தனர்.
இந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில், எம்.எல்.ஏ. சதாசிவம் மற்றும் அவரது குடும்பத்தினர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எம்.எல்.ஏ. சதாசிவம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி, சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை என்று வாதிட்டார்.
இதையடுத்து, காவல்துறையினரின் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், முன்ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணையை ஒத்திவைத்திருந்தது.
இந்த நிலையில், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் மற்றும் அவரது குடும்பத்தினர், சூரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கறிஞருடன் நேரில் ஆஜராகினர். அவர்களிடம் காவல்துறையினர் சுமார் இரண்டு மணி நேரமாக விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, மகன் சங்கரிடமும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.



-SXgDfGgJfO.jpg)