ட்ரெண்டிங்

விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு வழிமுறைகள் வெளியீடு!

தமிழகத்தில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. 
 
வரும் செப்டம்பர் 18- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று விநாயகர் சதுர்த்தி வெகு சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ள நிலையில், விநாயகர் சிலை தயாரிப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம். 

அதில், "மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் சிலைகளைக் கரைத்துச் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும். சிலைகளைப் பளபளப்பாக மாற்ற மரங்களின் பிசின்களை பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கக் கூடாது. பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களைப் பயன்படுத்தக் கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது. 
நச்சு ரசாயனங்கள், எண்ணெய் வண்ணப்பூச்சை சிலைகள் மீது பயன்படுத்தக் கூடாது. களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது". இவ்வாறு வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.