ட்ரெண்டிங்

ஈரோடு- நான்டேட் வாராந்திர சிறப்பு ரயில் சேலம் வழியாக இயக்கப்படும் என அறிவிப்பு!

ஈரோடு- ஹஸுர் சாஹிப் நான்டேட் (Erode- Hazur Sahib Nanded) இடையேயான வாராந்திர சிறப்பு ரயில், சேலம் வழியாக இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஈரோடு- ஹஸுர் சாஹிப் நான்டேட் இடையேயான வாராந்திர சிறப்பு ரயில், சேலம் வழியாக இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில் சேவை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது. 

அதன்படி, நான்டேட்- ஈரோடு வாராந்திர சிறப்பு ரயில் (ரயில் எண் 07189), வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில், அதாவது நாளை (செப்டம்பர் 01) நான்டேட் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 02.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் (செப்டம்பர் 02) மதியம் 12.48 மணிக்கு சேலம் ரயில் நிலையத்தை வந்தடையும். பின்னர் மதியம் 12.50 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மதியம் 02.00 மணிக்கு ஈரோடு ரயில் நிலையத்தைச் சென்றடையும். 

அதேபோல், மறுமார்க்கத்தில், ஈரோடு- நான்டேட் வாராந்திர சிறப்பு ரயில் (ரயில் எண் 07190), வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில், அதாவது செப்டம்பர் 03- ஆம் தேதி அன்று மாலை 05.15 மணிக்கு ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மாலை 06.15 மணிக்கு சேலம் ரயில் நிலையத்தை வந்தடையும். பின்னர் மாலை 06.17 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்படும் ரயில், மறுநாள் (செப்டம்பர் 04) காலை 07.30 மணிக்கு நான்டேட் ரயில் நிலையத்தைச் சென்றடையும். 

ஈரோடு- நான்டேட் வாராந்திர சிறப்பு ரயில், செப்டம்பர் 03- ஆம் தேதி முதல் அக்டோபர் 01- ஆம் தேதி வரை அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும், நான்டேட்- ஈரோடு வாராந்திர சிறப்பு ரயில், செப்டம்பர் 01- ஆம் தேதி முதல் செப்டம்பர் 29- ஆம் தேதி வரை அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் இயக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.