ட்ரெண்டிங்

ஐந்து நாட்களுக்கு பிறகு காவிரியில் நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு! 

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து ஐந்து நாட்களுக்கு பிறகு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழைக் காரணமாக, கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 4,000 கனஅடியில் இருந்து 6,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. 

இன்று காலை 08.00 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 131 கனஅடியில் இருந்து 299 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 58.99 அடியாகவும், நீர் இருப்பு 23.93 டி.எம்.சி.யாகவும் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 9,000 கனஅடியாகக் குறைத்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 

இதனிடையே, கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீரை தமிழகத்திற்கு திறக்கக் கோரி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.