ட்ரெண்டிங்

417.75 கி.மீ நீளத்திற்கு தார் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது மாவட்ட ஆட்சியர் கார்ம

417.75 கி.மீ நீளத்திற்கு தார் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தகவல்! 

முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டம், எடப்பாடி ஊராட்சி ஒன்றியம், செட்டிமாங்குறிச்சி ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலைப் பணிகள் தேர்வுச் செய்யப்படும் போது, குக்கிராமங்களை இணைக்கும் சாலைகள், பள்ளிகள், சந்தைகள் உள்ளிட்ட இதர வசதிகளை இணைக்கும் வகையிலான சாலைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கான முழுமையான அனைத்து நிதியையும் மாநில நிதிக்குழு மானிய நிதியில் இருந்தே அளிக்கப்படுகிறது. 

குறிப்பாக, முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் சாலைப் பணிகள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சாலையின் பராமரிப்புப் பணி மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்வதுடன் சாலையின் இரண்டு பக்கங்களிலும் பயன்தரத்தக்க மரங்களை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நட்டு பராமரித்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சேலம் மாவட்டத்தில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2023- 24 ஆம் ஆண்டுகளில் ரூபாய் 170.40 கோடி மதிப்பீட்டில் 355 சாலைப் பணிகள் சுமார் 443.99 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் தற்போது வரை ரூபாய் 8.80 கோடி மதிப்பில் 26.24 கிலோ மீட்டர் நீளமுள்ள 20 சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ரூபாய் 161.60 கோடி மதிப்பிலான 417.75 கிலோ மீட்டர் நீளத்திற்கான தார் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன எனத் தெரிவித்துள்ளார்.