ட்ரெண்டிங்

சாலையோர தடுப்பின் மீது மோதிய இருசக்கர வாகனம்- கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியைச் சேர்ந்தவர் மாதையன். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், சாமுவேல் (வயது 19) என்பவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் நிலையில், சூர்யா (வயது 20) என்பவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நரம்பியல் துறையில் இரண்டாமாண்டு படித்து வருகிறார். 

இந்த நிலையில், அண்ணன்- தம்பி இருவரும் தங்களின் சொந்த ஊரான தருமபுரி மாவட்டத்திற்கு சேலம் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது மகுடஞ்சாவடி அருகே இருசக்கர வாகனம் வந்த போது, நிலைத்தடுமாறி சாலையோர தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சாமுவேல், சூர்யா தூக்கிவிடப்பட்டனர். 

சாலையில் ரத்த வெள்ளத்தில் இருந்த சூர்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த சாமுவேல் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மகுடஞ்சாவடி காவல்துறையினர், சூர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அத்துடன், விபத்து குறித்து வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.