சேலம் மாவட்டம், எடப்பாடிக்கு அருகே உள்ள நைனாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அசேன் (வயது 36). லாரி ஓட்டுநரான இவர், நிஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
தினமும் மதுஅருந்தும் பழக்கம் கொண்ட அசேன், மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த சூழலில், கடந்த டிசம்பர் 01- ஆம் தேதி இரவு அசேன் வீட்டில் மயங்கிய நிலையில், சுயநினைவின்றி கிடந்துள்ளார். இது குறித்து 108 ஆம்புலன்ஸுக்கு குடும்பத்தினர் தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அசேனை பரிசோதனை செய்தனர். அதில் அவர் ஏற்கனவே உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.
இது குறித்து எடப்பாடி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறையினர், அசேனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதைத் தொடர்ந்து வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், அசேனின் மனைவி நிஷாவை அழைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, மதுஅருந்தி விட்டு வந்த அசேன், குடும்பத்தினரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அசேனின் தாய், மனைவி, நிஷாவின் சித்தி ஆகியோர் அவரை சரமாரியாக தாக்கியத்துடன், சேலையால் கழுத்தை நெரித்துள்ளனர். இதில் அசேன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, மூன்று பெண்களையும் கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலில் சேலம் மகளிர் சிறையில் அடைத்துள்ளனர்.


