ட்ரெண்டிங்

நாம் தமிழர் கட்சி உண்ணாவிரதம் இருந்தால் ஆதரவு! 

சேலம் மாவட்டம், எடப்பாடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மரக்காணம் சம்பவத்திற்கு பிறகு கள்ளச்சாராயம் குடித்து ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். அ.தி.மு.க. ஆட்சியில் பரிந்துரையின் படி சாத்தான்குளம் வழக்கு சி.பி.சி.ஐ.டி.யிடம் இருந்து சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. 

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இவ்வளவு பேர் உயிரிழந்த பின்பும் சி.பி.ஐ. விசாரிக்க முதலமைச்சர் மறுத்து வருகிறார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கு தடையின்றி கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சியைத் தொடர்ந்து உடுமலையில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது; இதற்கு பின்பும் நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசு தயங்குகிறது. 

கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய மரணங்களுக்கு சி.பி.ஐ. விசாரணை கேட்டு அ.தி.மு.க. நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு தெரிவித்தது. அதேபோல் நாம் தமிழர் கட்சி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினால் அ.தி.மு.க. ஆதரவு தெரிவிக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.