ட்ரெண்டிங்

ஒரே நாளில் சுமார் 27 லட்சத்துக்கு ஏலம் போன பருத்தி மூட்டைகள்!

சேலம் மாவட்டம், கோனேரிப்பட்டியில் உள்ள திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் கிளை அலுவலக வளாகத்தில் வாரந்தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று (செப்டம்பர் 01) நடைபெற்ற பருத்திக்கான பொது ஏலத்தில் கோனேரிப்பட்டி, தேவூர், குள்ளம்பட்டி, குருவரெட்டியூர், செங்கானூர், பூமணியூர், ஒக்கிலிப்பட்டி, தண்ணித்தாசனூர், கல்வடங்கம், சென்றாயனூர் உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பருத்தி மூட்டைகளைக் கொண்டு வந்தனர். 

அதேபோல், சேலம், கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். நாள் முழுவதும் நடைபெற்ற ஏலத்தில் சுமார் 1,250 பருத்தி மூட்டைகள் ரூபாய் 27 லட்சத்துக்கு ஏலம் போனது. 

குறிப்பாக, பி.டி. ரக பருத்தி குவிண்டாலுக்கு ரூபாய் 6,060 முதல் ரூபாய் 7,299 வரையிலும், கொட்டு ரக பருத்தி ரூபாய் 4,100 முதல் ரூபாய் 5,599 வரையிலும் ஏலம் போனது. வழக்கத்தை விட அதிக விலைக்கு பருத்தி மூட்டைகள் ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.