ட்ரெண்டிங்

டீயில் குறைவாக இருந்த சர்க்கரை....பேக்கரி சூறையாடல்! 

சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த தேவூர் அண்ணமார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 42). இவர் எடப்பாடியை அடுத்த ஆலச்சம்பாளையம் அருகே உள்ள புறவழிச்சாலையில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவரது பேக்கரியில் திருச்சி மாவட்டம், மணப்பாறைப் பகுதியைச் சேர்ந்த ரவி (வயது 37), டீ மாஸ்டராகப் பணிபுரிந்து வருகிறார். 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (ஜூலை 25) மாலை சுமார் 5 மணியளவில் ஆலச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளியான மகாராஜன் என்பவர் லட்சுமணனின் பேக்கரிக்கு டீ குடிக்க வந்துள்ளார். அப்போது அவர் வாங்கிய டீயில் சர்க்கரை குறைவாக இருந்ததால், கூடுதல் சர்க்கரை போடும் படி டீ மாஸ்டரிடம் கேட்டுள்ளார். 

இதில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக முற்றிய நிலையில், மகாராஜன் மீது டீ கொட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மகாராஜனின் குடும்பத்தினர் பேக்கரியில் திரண்டு, பேக்கரியை சூறையாடினர். இதில் காயமடைந்த மகாராஜன், டீ மாஸ்டர் ரவி ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

இந்த சம்பவம் குறித்து எடப்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.