சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் சேலம் மாவட்டத்தில் உள்ள 52 ஓடைகள் மற்றும் கசிவுநீர் குட்டைகளில் ரூபாய் 15.68 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் பராமரிப்பு பணிகளை, சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம். மல்லியக்கரையில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி முன்னிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைப்படி தமிழ்நாடு முழுவதிலும் உள்ள நீர்வடிப்பகுதிகளில் நீர்வடிப்பகுதி வளர்ச்சி முகமை மூலம் அமைக்கப்பட்ட தடுப்பணைகள், கிராம குளங்கள், கசிவு நீர் குட்டைகள், அமிழ்வு நீர் குட்டைகள், கால்நடைகளுக்கு குட்டைகள், வரத்து கால்வாய்கள் மற்றும் சிறு ஊரணிகள், ஏரிகள், ஓடைகள், கண்மாய்கள் ஆகியவற்றில் வரத்து மற்றும் வெளிச்செல்லும் கால்வாய்களில், நீரோட்டத்தை பாதிக்கும் வகையில் பரவியுள்ள புதர், செடி மற்றும் கொடிகளை அகற்றி நீர்சேகரிப்பு கட்டமைப்புகளுக்கு வரும் நீரோட்டத்தை அதிகரிக்கவும், கட்டமைப்புகளை தூர்வாரி அதன் கொள்ளளவை மீட்கும் பொருட்டும் பராமரிப்பு பணிகள், 2021-22-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு நீர்வடிப்பகுதி வளர்ச்சி முகமை மூலமாக பெறப்பட்ட நீர்வடிப்பகுதி வளர்ச்சி நிதியை கொண்டு வேளாண்மைப் பொறியியல் துறையிலுள்ள இயந்திரங்களை பயன்படுத்தி பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விவசாய நீர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் பொருட்டு மழைநீரை சேகரித்து. நிலத்தடி நீர்மட்டத்தினை அதிகரிக்க, நீர்வடிப்பகுதிகளில் சமுதாய குளங்கள் போன்ற மண் வேலை மட்டும் கொண்ட புதிய நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைத்திடும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க சேலம் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டு 2025-26 ல் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் பருவமழைக்கு முன்னர் ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் பராமரிப்பு திட்டத்தின் கீழ் ஓடைகள் மற்றும் கசிவுநீர் குட்டைகளில் 52 பணிகள் ரூபாய் 15.68 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் கூடுதலாக 31.000 கனமீட்டர் நீர் சேகரிப்பதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் உயர்வதால் அருகிலுள்ள சுமார் 300 விவசாயிகள் பயனடைவார்கள். அதேபோன்று சேலம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் இத்திட்டத்தின் மூலம் 200 பணிகள் ரூபாய் 41.36 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைப்படி நீர்வளத்துறையின் சார்பில் 2025-26 ஆம் ஆண்டு சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்திற்குட்பட்ட நீர்வளத்துறையின் ஆறுகள் மற்றும் வழங்கு வாய்க்கால்கள் தூர்வாரும் பணிக்காக சேலம் மாவட்டத்தின் 31 பணிகளுக்கு ரூபாய் 220 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஏற்கனவே பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
மேலும், கடந்த 4 ஆண்டுகளில் வேளாண்மைப் பொறியியல் துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பாசன வசதிகள், தூர்வாருதல், மின்மோட்டார் பம்பு செட்டுகள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள், வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் உள்ளிட்ட திட்டங்கள் ரூபாய் 31.55 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக நீர்வளத்துறையின் சார்பில் மாநில நிதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 3.80 கோடி மதிப்பீட்டில் கனவாய்க்காடு, சுவேதா நதியின் குறுக்கே தடுப்பணையும், சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூபாய் 4.20 கோடி மதிப்பீட்டில் 54 பணிகளும், நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 7.47 கோடி மதிப்பீட்டில் சரபங்கா நதி, கிருஷ்ணாபுரம் 74 மற்றும் லத்துவாடி ஓடைகளின் குறுக்கே தடுப்பணைகளும், ரூபாய் 8.91 கோடி மதிப்பீட்டில் புத்திரக்கவுண்டம்பாளையம் ஏரி வழங்கு வாய்க்கால் புனரமைக்கும் பணிகள் என ரூபாய் 25.83 கோடி மதிப்பீட்டிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டள்ளன.
மேற்படி வரத்து வாய்க்கால் மற்றும் வழிந்தோடி வாய்க்கால் தூர்வாருவதன் மூலம் ஏரிகளுக்கு நீரோட்டத்தினை முழுமையாக கொண்டு செல்லவும், கரை உடைப்பு, வெள்ளநீர் வடிதல் நீர் விரயத்தை தடுக்கவும், நிலத்தடி நீர் மட்டம் உயர்த்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கூடுதல் இயந்திரங்களைப் பயன்படுத்தி குறிப்பிட்ட கால அளவில் பணிகளை முடித்திடவும், இப்பணிகளை நாள்தோறும் கண்காணித்து அறிக்கை வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம், வேளாண் பொறியியல்துறை செயற்பொறியாளர் திருகுமரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரம் உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


