ட்ரெண்டிங்

50 அடிக்கு கீழ் சரிந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்!

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழைக்கு ஏற்ப மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இருக்கும். இந்த நிலையில், கடந்த ஜூன் 12- ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா குறுவை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது, அணையில் நீர்மட்டம் 103.35 அடியாகக் குறைந்தது. 

டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு சுமார் 3,000 கனஅடியில் இருந்து தொடங்கிப் படிப்படியாக அதிகரித்து, சுமார் 13,000 கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து, டெல்டா மாவட்ட விவசாயிகள் பயிர் நடும் பணியில் ஆர்வம் காட்டினர். எனினும், பல இடங்களுக்கும் தண்ணீர் சென்று சேரவில்லை. காரணம், வினாடிக்கு சுமார் 15,000 கனஅடி அளவுக்கு மேல் தண்ணீர் திறந்தால் மட்டுமே, டெல்டா மாவட்டங்களின் கடைமடை வரைச் சென்று சேரும்.  

இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் கர்நாடகா அணைகளின் நீரை எதிர்பார்த்து, தமிழக விவசாயிகள் காத்திருந்தனர். கர்நாடகா அரசு, தமிழகத்திற்கு மாதந்தோறும் வழங்க வேண்டிய நீரை வழங்காததே மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைய காரணமாகும். எனினும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு காரணமாக, கணிசமான அளவுக்கு நீரை திறந்துவிட்ட போதிலும், அது பயன்தராது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

தற்போது மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 8,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் 12- ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 103 அடியாக இருந்த நிலையில், ஆகஸ்ட் 31- ஆம் தேதி 50 அடிக்கும் குறைவாக, 49.97 அடியாகச் சரிந்தது. சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் 50 அடிக்கு கீழ் சரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இன்று (செப்டம்பர் 01) காலை 08.00 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 549 கனஅடியில் இருந்து 562 கனஅடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 8,000 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 49.97 அடியில் இருந்து 48.92 அடியாக சரிந்துள்ள நிலையில், நீர் இருப்பு 17.13 டி.எம்.சி.யாக உள்ளது. 

மேட்டூர் அணையின் தண்ணீரை நம்பியுள்ள விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.