சேலத்தில் தவெக எம்.எல்.ஏ.வைக் கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம் – தகுதி நீக்கம் செய்து கைது செய்ய வலியுறுத்தல்!
சேலம்:
கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள சர்ச்சையைக் கண்டித்து, அவரை சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து கைது செய்ய வலியுறுத்தி சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான இந்த விவகாரத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக சேலம் கோட்டை மைதானத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை உடனடியாக தகுதி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் பாலியல் தொந்தரவுகளைத் தடுத்து நிறுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மேலும், தமிழக அரசின் ஆறு மாத கால ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் குற்றம்சாட்டிய போராட்டக்காரர்கள், அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
மாவட்டத் தலைவர் வைரமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.



