கால்நடை பராமரிப்புத் துறையில் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – அமைச்சர் கமலி தகவல்!
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவமனை மற்றும் நிர்வாக அலுவலகத்தில் அமைச்சர் கமலி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, கால்நடை மருத்துவமனையில் கால்நடைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், மருத்துவமனையின் தேவைகள் மற்றும் கூடுதல் வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கமலி, கறவை மாடுகள் அடுத்தடுத்து உயிரிழப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில், கால்நடைகளின் இறப்புக்கான காரணங்களைக் கண்டறிய மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், நோய்கள் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள உதவியாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.
தலைவாசல் கால்நடைப் பூங்கா தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், அங்கு தேவையான மருத்துவர்கள் அயற்பணியின் (Deputation) அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே ஒரு நாள் முழுவதும் நேரில் ஆய்வு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். கால்நடைப் பூங்காவில் தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவர்களின் எண்ணிக்கையைச் சீரமைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கமலி கூறினார்.



