நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சேலத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் தொடக்கம்
சேலம், ஜூலை
நாடு முழுவதும் நீட் (NEET) தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, சேலத்தில் இந்திய மாணவர் சங்கம் (SFI), இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
டெல்லியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களை டெல்லி காவல்துறையினர் தாக்கியதாக குற்றம்சாட்டிய போராட்டக்காரர்கள், அதற்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், இந்தியாவில் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, சேலம் தாதகாப்பட்டி பகுதியில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். இதில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்திற்கு காவல்துறையினர் தொடர்ந்து அனுமதி மறுத்து வருவதாக அமைப்பினர் குற்றம்சாட்டினர். இருப்பினும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்றும், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் அழைப்பு விடுத்தனர்.



-SXgDfGgJfO.jpg)