டீசல் கொள்முதல் நிதி நெருக்கடி… மகளிர் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்திற்குச் சிக்கலா?
சேலம்: தமிழக அரசின் மகளிர் ‘வெற்றிப் பயணம்’ திட்டம் தொடர்ந்து செயல்படுவதில் நிதி நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள் சம்மேளன மாநிலப் பொதுச் செயலாளர் பத்மநாபன் தெரிவித்துள்ளார். டீசல் கொள்முதல் தொகையை உரிய காலத்தில் செலுத்தாவிட்டால் பேருந்து இயக்கத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்கப்பட்ட மகளிர் வெற்றிப் பயணத் திட்டத்தின் கீழ், ஏற்கெனவே நடைமுறையில் இருந்த விடியல் பயணத் திட்டத்துடன் கூடுதலாக எல்.எஸ்.எஸ். மற்றும் விரைவுப் பேருந்துகள் இணைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். மேலும், புறநகர்ப் பேருந்துகளில் முதலில் 80 கி.மீ. வரை அனுமதிக்கப்பட்ட பயணம் பின்னர் 120 கி.மீ. வரை நீட்டிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு அக்டோபர் 15-ஆம் தேதி மூன்று நாள் கடனாக டீசல் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், அதற்கான தொகையை அக்டோபர் 18-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார். தொகை செலுத்தப்படாவிட்டால் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து டீசல் விநியோகம் பாதிக்கப்படலாம் என்றும், இதனால் பேருந்து சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், போக்குவரத்துக் கழகங்களில் டயர் பற்றாக்குறை நிலவுவதாகவும், பழைய டயர்களை மறுசீரமைத்து மீண்டும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஓய்வூதியர்களுக்கான ஓய்வுகாலப் பலன்கள் தொடர்பான வழக்குகளும், அதற்கான வட்டித் தொகை செலுத்துவதும் போக்குவரத்துக் கழகங்களின் நிதிச் சுமையை அதிகரிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
எனவே, தமிழக முதல்வர் மற்றும் நிதித்துறை, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடனடியாக ஆலோசனை நடத்தி, போக்குவரத்துக் கழகங்களுக்குத் தேவையான நிதியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இல்லையெனில், அக்டோபர் 18-ஆம் தேதிக்குப் பிறகு பேருந்து இயக்கத்திலும் மகளிர் வெற்றிப் பயணத் திட்டத்தைத் தொடர்வதிலும் சிக்கல் ஏற்படலாம் எனப் பத்மநாபன் தெரிவித்தார்.



-hcTFAGMRGb.jpg)